தஞ்சாவூர் அருகே மதகுகள் முறையாக சீரமைக்கப்படாததால் கனமழை பெய்தும் முழு கொள்ளளவை எட்டாத கள்ளப்பெரம்பூர் ஏரி இரும்பு ஷட்டர்களுக்குப் பதிலாக பனைமட்டைகளால் தடுப்பு ஏற்படுத்திய விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே மதகுகள் முறையாக சீரமைக்கப்படாததால் கனமழை பெய்தும்  முழு கொள்ளளவை எட்டாத கள்ளப்பெரம்பூர் ஏரி இரும்பு ஷட்டர்களுக்குப் பதிலாக பனைமட்டைகளால் தடுப்பு ஏற்படுத்திய விவசாயிகள்
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் சேதமடைந்துள்ள மதகுகள் சீரமைக்கப்படாததால், கனமழை பெய்தும் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள செங்கழுநீர் ஏரி(கள்ளப்பெரம்பூர் ஏரி) 639 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கச்சமங்கலம் அருகே வெண்ணாற்றில் பிரிந்து வரும் ஆனந்தகாவிரி வாய்க்கால் வழியாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்தால் கல்விராயன்பேட்டை அருகே புது ஆற்றில் உள்ள கீழ்ப்பாலம்(சைப்பன்) வழியா கவும் இந்த ஏரிக்கு தண்ணீர் வந்துசேர்கிறது.

இந்த ஏரி தண்ணீரைக் கொண்டு, கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர் உள்ளிட்ட கிராமங்களில் 2,262 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற 8 மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதால், தற்போது பெய்த கனமழையால் வந்த தண்ணீரை ஏரியில் முழுமையாக தேக்கிவைக்க முடியாமல் வெளியேறியது. இதனால், ஏரி முழு கொள்ளளவை எட்டவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி தங்கமணி கூறியதாவது: இந்த ஏரியில் கடந்த 2004-ம் ஆண்டு, ரூ.5 கோடி மதிப்பில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றபோதும், மதகுகள் முறை யாக பராமரிக்கப்படவில்லை. அதன்பிறகு, பல ஆண்டுகளாக ஏரி தூர் வாரப்படாமல் கிடந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு இளைஞர்கள், ஊர் மக்களின் நிதி பங்களிப்புடன், அரசு குடிமராமத் துப் பணிகளை மேற்கொண்டது.

தொடர்ந்து, 2020-21-ம் ஆண்டு குடிமராமத்துப் பணிக்காக ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கல்லணையில் ஜூன் 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாள், இந்த ஏரி அவசரகதியில் தூர் வாரப்பட்டு, பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. மதகுகளும் சீரமைக்கப்படவில்லை. இதனால், மதகுகளில் ஏற்பட்ட ஓட்டை வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மதகுகளில் இரும்பு ஷட்டர்கள் இல்லாததால், தற்போது பனைமட்டைகளையும், வைக்கோல்களையும் வைத்து அடைத்து, நீரை தேக்கிவைத் துள்ளோம். இந்த ஏரியில் மதகுகள் முறையாக இருந்தால், தண்ணீரை சேமித்து வைத்து, கோடைகாலங்களில் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் விவசாயம் செய்ய முடியும் என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, “கள்ளப் பெரம்பூரி ஏரியை சீரமைக்கும் பணிகள் தொடங்கியபோது, ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டதால், பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை. எனவே, வரும் கோடைகாலத்தில் இந்த ஏரியின் மதகுகள் முழுமையாக சீரமைக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in