

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலை மற்றும் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே. எஸ்.தென்னரசு வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், சிவசுப்பிரமணி, ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பன்னீர் செல்வம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை மின் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை அமைச்சர் செங்கோட்டையனும், எம்.ஜி.ஆர். சிலையை தமிழக சட்டபேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனும், திறந்து வைத்தனர். கட்சி அலுவலகம், கூட்ட அரங்கு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தினை கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இதையடுத்து, அமைச்சர் கே. சி.கருப்பணன் 80 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி, மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன், தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.