நாற்கர சாலையில் வேகத்தடுப்பு மீண்டும் வைக்க வலியுறுத்தல்

நாற்கர சாலையில் வேகத்தடுப்பு  மீண்டும் வைக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது, 4 வழிச்சாலைகளில் இருந்து அகற்றப்படும் வேகத்தடுப்புகளை மீண்டும் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் சேலம்-பெங்களூரு, சேலம்- கோவை, சேலம்- நாமக்கல், சேலம்- உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 4 வழிச்சாலைகள் செல்கின்றன. இச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சராசரியாக 80 கிமீ முதல் அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்கின்றன. இச்சாலைகள் வழியோரங்களில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தேவைகளுக்காக 4 வழிச்சாலைகளின் குறுக்கே கடந்து செல்லும்போது, அதிவேக வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், 4 வழிச்சாலைகளில் மக்கள் அதிகமாக கடந்து செல்லும் இடங்களில் மக்களின் கோரிக்கையை ஏற்று வேகத்தடுப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேகத்தடுப்புகள் முக்கிய பிரமுகர்கள் இச்சாலைகளை கடந்து செல்லும்போது, அகற்றப்படுவதும், பின்னர் அதை மீண்டும் முறையாக வைக்காமல் இருப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால், இச்சாலைகளில் விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வரும்போதெல்லாம், பாதுகாப்பு கருதி, சாலைகளில் உள்ள வேகத்தடுப்புகளை அகற்றிவிடுகின்றனர். பின்னர் வேகத்தடுப்புகளை மீண்டும் அதே இடத்தில் வைப்பதில்லை.

ஏதேனும் விபத்து நேரிடும்போது, மீண்டும் அந்த இடத்தில் வேகத்தடுப்புகளை போலீஸார் வைக்கின்றனர். மேலும், சேதமான இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாத குறைபாடுகளுடன் கூடிய வேகத்தடுப்புகள் வைப்பதால், விபத்துக்களை தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சாலைகளில் இருந்து அகற்றப்படும் வேகத்தடுப்புகளை உரிய இடங்களில் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in