Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

திண்டுக்கல் குடிநீர் பணி தாமதத்துக்கு அமைச்சர் சீனிவாசன் பதில் சொல்வாரா? மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலியில் பேசிய ஸ்டாலின் கேள்விகாணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கூட்டத்தில் பங்கேற்ற அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள். (வலது) காணொலி வாயிலாக திண்டுக்கல் மாவட்ட திமுகவினருடன் பேசிய மு.க.ஸ்டாலின்.

திண்டுக்கல் குடிநீர், பாதாளச் சாக்கடை, பாலகிருஷ்ணாபுரம் பாலம் கட்டும் பணிகள் இதுவரை முழுமையடையவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்வாரா அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன் எனக் காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

‘தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்ட கட்சியினருடன் காணொலி வாயிலாகப் பேசினார். இவரது பேச்சு மாவட்டத்தில் 150 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது.

திண்டுக்கல்லில் தனியார் மஹாலில் நடந்த இந்நிகழ்ச்சியில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சீனிவாசனால் திண்டுக் கல்லுக்கு ஒரு குண்டுமணி அளவு கூட பலன் இல்லை. அவர் தொகுதிக்கு என்ன செய்தார் எனச் சொன்னால் நான் என்னை திருத்திக் கொள்கிறேன். திண்டுக்கல்லை மாநகராட் சியாக அறிவித்தார்கள். அதற்குப் போதுமான நிதி பெற்றுத் தந்தாரா?. குடிநீர் பிரச்சினையைத் தீர்த்தாரா?, பாலகிருஷ்ணாபுரம் பாலம் கட்டும் பணி 7 ஆண்டுகள் ஆகியும் முடிவடையவில்லை. திண்டுக்கல் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படவில்லை. பாதாளச் சாக்கடைப் பணி முழுமை யடையவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்வாரா அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன். இது திண்டுக்கல் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்.

வேளாண் சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் பெண் என்றும் பாராமல் முன்னாள் எம்.எல்.ஏ, பாலபாரதியை இழுத்துச் சென்று கைது செய்தனர். இதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x