

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அஜித்(24). இவர், எலெக்ட்ரீசியன், கார் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக அஜித் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அஜித் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவரை மாணவி கண்டித்துள்ளார். பின்னர், தன்னோடு பழக வேண்டாம் எனக் கூறி, பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த மாணவி கல்லூரிக்கு செல்ல நேற்று தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். அஜித்தும் அதே பேருந்தில் ஏறி, மாணவியின் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அஜித் கத்தியால் ஆஷாவின் கழுத்தை அறுத்துவிட்டு, பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால், சாலையில் சென்றவர்கள் அஜித்தை பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.