

திருச்சி மாவட்டம் மணப்பாறை, உப்பிலியபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ.2.32 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், அருள்ஜோதி உள்ளிட்டோரை கொண்ட குழுவினரும், உப்பிலியபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர்கள் சேவியர் ராணி, சக்திவேல் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினரும் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த அதிகா ரிகள், பணியாளர்கள், பத்திரப் பதிவுக்கு வந்திருந்தவர்கள் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து நேற்றிரவு வரை விசாரணை நடத்தினர். அலுவலக பணியாளர்களிடம் நடத்தப் பட்ட சோதனையின் போது உப்பிலியபுரத்தில் கணக்கில் வராத ரூ.81 ஆயிரம், மணப்பாறையில் ரூ.1.51 லட்சம் என ரூ.2.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.