Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM

தேனியில் ரூ.265 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி இன்று அடிக்கல் நாட்டு விழா

தமிழகத்தின் 6-வது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைய உள்ளது. இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

தேனி அருகே வீரபாண்டியில் ரூ.265 கோடி செலவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளது. கல்லூரி கட்டுமானப் பணிக்கு முதல் கட்டமாக ரூ.94.72 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று(டி.10) சென்னையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை வீரபாண்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6-வது கால்நடை மருத்துவக் கல்லூரி இது ஆகும்.

இதன் மூலம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை மற்றும் கோழிப் பண்ணையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலும். மேலும் கேரள எல்லையாக உள்ளதால் பால், இறைச்சி மற்றும் முட்டை பதப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் 40 மாணவ, மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர். கட்டுமானப் பணிகள் முடியும்வரை தற்காலிகமாக பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே தனியார் கட்டிடத்தில் வகுப்புகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள கட்டிடத்தில் நவீன வகுப்பறைகளுடன் கூடிய 8 கல்வித் தொகுதி கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்டவை அமைய உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x