பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில்  அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே அவரது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையிலான கட்சியினர், அம்பேத்கர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில், ஊத்துக்குளி சமுதாயக் கூடத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அமைப்பின் தாலுகா செயலாளர் க.லெனின் தலைமை வகித்தார். காங்கயம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் தனராசு தொடங்கி வைத்தார்.

ஊத்துக்குளி காவல் நிலைய ஆய்வாளர் டி.ஏ.தவமணி, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர்ஜெ.வசந்தகுமார் தலைமையிலான குழுவினர், 20 யூனிட் ரத்தம் சேகரித்தனர். முன்னதாக, அம்பேத்கர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

போயம்பாளையத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த அம்பேத்கர் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் வி.எஸ்.சசிகுமார் தலைமை வகித்தார்.

உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் முன்பாக, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, அதன் நிர்வாகி விடுதலைமணி தலைமை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை சார்பில் தனியாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல மடத்துக்குளம், குடிமங்கலம், பெதப்பம்பட்டி உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in