

ஆனைவாரி முட்டல் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் பயணிகள் குளிக்கவும், ஏரியில் படகு சவாரிக்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஆத்தூர் அடுத்த முட்டல் கிராமத்தை ஒட்டி கல்வராயன் மலை அடிவாரத்தில் ஆனைவாரி முட்டல் அருவி உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதமாக இங்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும் பயணிகளுக்கு அனுமதியளிக் கப்பட்டது.
இதனால், கடந்த வாரம் முழுவதும் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. இந்நிலையில், புரெவி புயல் காரணமாக கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் நேற்று முன்தினம் இரவு முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்கவும், ஏரியில் படகு சவாரி செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா வந்த பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “கடந்த வாரம் தான் ஆனைவாரி அருவியில் குளிக்க பயணிகளுக்கு அனுமதியளிக் கப்பட்டது. தற்போது விடுமுறை என்பதால் அருவியில் குளித்து மகிழ குடும்பத்தினருடன் வந்திருந்தோம். ஆனால், இங்கு வந்த பின்னர் தான் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி மற்றும் ஏரி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால், ஏமாற்றம் அடைந்தோம்” என்றார்.