

ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என, முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
திமுக சார்பில் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிறுத்தி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிக்குழு இணைச் செயலாளர் ராஜ கண்ணப்பன் பிரச்சார பயணத்தை நேற்று தொடங்கினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது அவரது சொந்த விருப்பம். ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. என்றார் அவர். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ உடனிருந்தார்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் ராஜ கண்ணப்பன் கூறும்போது, “திமுக கூட்டணி கட்டுக்கோப்பானது. அதிமுகவில் நடக்கும் குழப்பங்கள் அனைவருக்கும் தெரியும். சேலம், காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். மக்களை சந்திக்கவில்லை என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு” என்றார்.