

கவிஞர் சுரதா நூற்றாண்டு சிறப்புக்கூட்டம், திருப்பூர் - மங்கலம் சாலை மக்கள் மாமன்ற நூலகத்தில் நேற்று நடைபெற்றது. மக்கள் மாமன்றஅமைப்புத் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
பெருமாநல்லூரில் வசிக்கும் நாமக்கல் நாதனின் ‘சுரதா என் ஆசான்’ எனும் நூல், சுரதாவின் இலக்கிய அனுபவக் கட்டுரைகள் அடங்கிய ‘என் காலடித் தடங்கள்’ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை வின்சென்ட் வெளியிட, திருக்குறள் மணியம் பெற்றுக்கொண்டார்.
நாமக்கல் நாதன் பேசும்போது, "உலகின் 93 மொழிகளுக்கு தாய்மொழியாக தமிழ் உள்ளது. பல மொழிகளில் தமிழ்ச் சொற்களும், அதன் தாக்கங்களும் உள்ளன. 4000 ஆண்டு தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் செழுமையான இலக்கிய பங்களிப்பு, இன்றைய நவீனத் தமிழ் இலக்கியம் வரை தமிழில் தொடர்கிறது. கவிதையோ, இலக்கியப் படைப்போ எழுதுவது நல்ல மொழிப் பயிற்சியாகும்.
தொழில் சார்ந்த கல்விக்கும்,வாழ்வியல் நடைமுறைக்கும் மொழிப் பயிற்சியும், பயன்பாடும் அவசியம் என்பதை இளம் தலைமுறை உணர வேண்டும். சுரதாவின் கவிதையும்,திரைப்படப் பாடல்களும் நூற்றாண்டை கடந்து தமிழுக்கு உரம் சேர்ப்பவை" என்றார்.
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.