Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

அவிநாசியில் தொழில் பூங்கா அமைக்க வலுக்கும் எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

அவிநாசி பகுதியில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கிராம மக்கள். படம்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்

அவிநாசி, சேவூர் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், சேவூர்அருகே தத்தனூர், புலிப்பார், பாப்பாங்குளம், புஞ்சை தாமரைக் குளம், போத்தம்பாளையம் என 5 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர், தொடர்ந்து 4-வது நாளாக போராடி வருகின்றனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 300-க்கும் மேற்பட் டோர் பல மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறும்போது, "விவசாயம், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் விவசாய கூலி வேலைகள் எங்களின் வாழ்வாதாரம். தற்போது அமைய உள்ள தொழில் பூங்காவால் வாழ்வாதாரம் பாதிக் கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் கெடும். சிப்காட் அமைந்தால் நிச்சயம் சாய ஆலைகள் வரும். இதனால், மண் வளமும் கெடும். நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

தத்தனூர், புலிப்பார், புஞ்சைதாமரைக்குளம் ஆகிய ஊராட்சிகளில் தொழில்பூங்கா திட்டம் வேண்டாம் என, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், அவிநாசி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள் ளோம். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, உறுதியான பதில் அளிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்.

60 ஆண்டுகள் போராடி அத்திக்கடவு- அவிநாசி திட்டம் பெற்றோம். இன்றைக்கு அந்த திட்டம் நிறைவேறி வரும் நிலையில், விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்றும் வேலையை அரசு செய்கிறது.

சுமார் 900 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டால் எங்கே செல்வது? தொழில்பூங்கா அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

ஆட்சியர் வரும்வரை தொடர்ந்து காத்திருப்போம். அதேபோல, அரசு அறிவிக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றனர்.

திட்டம் வராது: ஆட்சியர் உறுதி

இதையடுத்து, போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சி யர் வரும் வரை சாலை யோரம் காத்திருப்பதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ‘எங்கள் நிலம் எங்கள்உரிமை’, ‘தத்தனூருக்கு சிப்காட் வேண்டாம்’, ‘சாயக்கழிவுஎங்களுக்கு வேண்டாம்’ ஆகிய வாசகங்கள் இடம்பெற்றிருந்த பதாகைகளை வைத்திருந்தனர். பல மணி நேரம் போராட்டம் நீடித்ததையடுத்து, பொதுமக்களிடம் இருந்துஆட்சியர் மனுவை பெற்றுக்கொண்டார். தொழில் பூங்கா திட்டம் உங்கள் பகுதிக்கு வராது என ஆட்சியர் உறுதி அளித்ததாக, மனு அளித்து பேச்சு வார்த்தையில்ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x