

ஓசூர் வட்டாரத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் வேளாண் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் எம்.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் வட்டத்தில் வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நுண்ணீர் பாசனத்திட்டம், தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி அபிவிருத்தி திட்டம் மற்றும் பிரதமர் கிஸான் திட்டங்களை ஆய்வு செய்தார். திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் நிலக்கடலை பெருவிளக்கப் பண்ணை இடுபொருள்களை விநியோகம் செய்தார். ஆய்வு பணியின்போது ஓசூர் வட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன், துணை வேளாண் அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர் செல்லய்யா ஆகியோர் உடனிருந்தனர்.