

கரோனா காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம், என நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இந்த உதவித்தொகை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வாங்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வாங்க இயலாதவர்கள் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.
நேரில் வர முடியாதவர்கள் நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் இலவச தொலைபேசி எண் 18004254286 தொடர்பு கொண்டு அல்லது dlsanamakkal@gmail.com என்ற இமெயில் முகவரி மூலம் தகவல் அனுப்பி பயன்பெறலாம். இதுபோல் பரமத்தி, ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய சார்பு நீதிமன்றங்களில் இயங்கி வரும் சட்டப் பணிகள் குழுவையும் அணுகி மனு அளிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.