Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

மன்னார்குடியில் கொட்டும் மழையில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் மறியல்

மன்னார்குடியில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நேற்று மழையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி நகராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.290 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் இவர்களுக்கான ஊதியத்தை ரூ.380 ஆக உயர்த்தி வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால், மன்னார்குடி நகராட்சியில் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இதைக் கண்டித்தும், ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும் கடந்த 5 நாட்களாக தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பின்னர் அவர்கள் மழையில் நனைந்தபடி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு நகராட்சி அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பிரிவின் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் எம்.மணி உள்ளிட்ட நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x