

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காட்பாடி சார் பதிவாளர் அலுவலக உதவியாளர், ஆசிரியையான அவரது மனைவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் லிபேந்திரகுமார் (40). இவரது மனைவி அம்சா.பள்ளிகொண்டா அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அரசு ஊழியர்களான இவர்கள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள லிபேந்திரகுமாரின் வீட்டில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.