

திருவண்ணாமலையில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதாக கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனை உள்ளிட்ட இடங்களுக்கு பட்டா வழங்கவும் மற்றும் நிலத்தை அளந்து கொடுக்க, திருவண்ணாமலை நில வரித்திட்ட அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
பெரியார் சிலையில் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நகர நில வரி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நில வரி திட்ட அலுவலக வட்டாட்சியர் உதயகுமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.