ஊர்க்காவல் படைக்கு 2 திருநங்கைகள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு  2 திருநங்கைகள் தேர்வு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக ஊர்க்காவல் படைக்கு 2 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 40 பேரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் கடந்த 24-ம்தேதி எஸ்பி தலைமையில் மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. இதில் 100 பெண்கள் உட்பட 695 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம், கல்வித் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, 31 ஆண்கள், 7 பெண்கள்,2 திருநங்கைகள் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அக்சயா, ஜா ஆகிய 2 திருநங்கைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கும் பணி நியமன ஆணைகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேற்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்பி கூறியதாவது:

தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கும் 45 நாட்கள் பயிற்சிஇன்று (டிச.1) முதல் நடைபெறுகிறது. அதன் பிறகு போக்கு வரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும்முக்கிய நிகழ்வுகளின் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.560 மதிப்பூதிய அடிப்படையில் மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும்.

மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, செல்வன், தூத்துக்குடி ஊர்க்காவல்படை தளவாய் பாலமுருகன், துணை தளவாய் கவுசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in