ஊரக தொழில்களை மேம்படுத்த ஏதுவாக நீலகிரிக்கு ரூ.4.37 கோடி கரோனா சிறப்பு நிதி மாவட்ட ஆட்சியர் தகவல்

ஊரக தொழில்களை மேம்படுத்த ஏதுவாக நீலகிரிக்கு ரூ.4.37 கோடி கரோனா சிறப்பு நிதி  மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

ஊரகத் தொழில்களை மேம்படுத்த ஏதுவாக தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம்ரூ.4.37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர், உழவர்கள் என பல்வேறு தரப்பினரும் புதிய தொழில் தொடங்கவும் ரூ.300 கோடி மதிப்பில் கரோனா சிறப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் நீலகிரி மாவட்டத்துக்கு ரூ. 4.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 280 பேருக்கு நபர் ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ. 1.40 கோடி நீண்ட கால தனிநபர்தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. 14 உற்பத்தியாளர் குழுக்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக ரூ. 21 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 8 தொழில் குழுக்களுக்கு ரூ. 12 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத 169 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மூலம் ரூ. 1.69 கோடி நீண்ட கால கடனாக வழங்கப் பட்டுள்ளது.

அதேபோல, இரு உற்பத்தி யாளர் கூட்டமைப்புக்கு ரூ. 20 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உட்பட நலிவுற்றோர் தொழில் மேம்பாட்டுக்கு கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 280 பேருக்கு ரூ. 42 லட்சம் நீண்ட கால கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in