

‘நிவர்’ புயல் நிவாரணப் பணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் நேற்று ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் சம் பத் தெரிவித்த விவரம்:
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் மற்றும் பெருமள வில் பொருட்சேதம் ஏதுமின்றி பாது காக்க முடிந்தது. 441 இடங்களில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தங்க வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 17 ஆயிரத்து 186 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 226 மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
முதல்வர் கடந்த 26-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு வந்து பாதிப்புகளை பார்வையிட்டார். பெருமழை காரணமாக 95 குடிசை வீடுகள் முழுமையாகவும், 642 பகுதியாகவும், நிலையான வீடு 174 பகுதியாகவும் 5 முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 94 ஆடு மற் றும் மாடுகள். 6,300 வாத்துகள், 5,500கோழிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. 321 மரங்கள் சாய்ந்துள்ளன.
1,655 ஏக்கர் நெல், 870 ஏக்கர் நிலக்கடலை வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தற்போது நீர் வடிந்து, கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 155 ஹெக்டேர் வாழை காற்றினால் சேதமடைந்துள்ளன. 23.5 ஹெக்டேர் மரவள்ளி நீரில் மூழ்கியுள்ளது. 2.50 ஹெக்டேர் காய்கறி பயிர் கள் நீரில் மூழ்கியுள்ளது. போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து ‘நிவர்’ புயலால் பசு மாடு இழந்த ஒருவருக்கு ரூ.30 ஆயிரம், ஆடுகளை இழந்த6 நபர்களுக்கு ரூ.27 ஆயிரம், கன்றுகள் இழந்த 3 நபர்களுக்கு ரூ.48ஆயிரம், கூரை வீடுகள் பகுதியாக பாதித்த 10 நபர்களுக்கு ரூ.41 ஆயிரம் என 20 நபர்களுக்கு மொத்தம் ரூ 1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகையை அமைச்சர் சம்பத் வழங்கினார்.