

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது முதல் முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் விவசா யிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றியம் வாரியாக வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளிடம் குறை களைக் கேட்டார். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
மாவட்டத்தின் சராசரி மழை அளவு 788.60 மி.மீ. இதுவரை 530.47 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது. 2018-19-ம் ஆண்டு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடப்பாண்டில் தற்போது வரை 1,89,071 ஏக்கர் பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,765 கண்மாய்களில் 15 கண் மாய்கள் முழு அளவிலும், 769 கண்மாய்களில் 50 முதல் 90 சதவீதமும், 978 கண்மாய்களில் 25 சதவீதத்துக்குக் குறைவாகவும் தண்ணீர் உள்ளது. 3 கண்மாய்கள் வறண்ட நிலையிலும் உள்ளன என்றார்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் கே.குணபாலன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.