

திருப்பூர்: வீட்டு வாடகை தர மறுத்து பெண்ணை தாக்கிய நபரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் அணைப்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சசிகலா (27). இவர், நேற்று முன்தினம் மாநகர வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ‘நான் மேற்கண்ட முகவரியில் எனது தந்தை, தாயார் மற்றும் கணவருடன் வசித்து வருகிறேன். எனது தந்தைக்கு சொந்தமான 4 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளோம். அவற்றில் ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் எஸ்.சங்கர் (44) என்பவர், வீட்டு வாடகை, மின் கட்டணத்தை சரியாக தராமல் என்னிடமும், எனது தந்தையிடமும் பிரச்சினை செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சங்கர் என்னை தாக்கினார். போலீஸார் விசாரித்தபோது, அக்டோபர் 26-ம் தேதி வீட்டை காலி செய்வதாக எழுதிக்கொடுத்தார். இதுவரை காலி செய்யவில்லை. கடந்த அக்டோபர் 31-ம் தேதி தகாத வார்த்தைகளால் திட்டி, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் அனுராதா தலைமையிலான போலீஸார், நேற்று முன்தினம் சங்கரை கைது செய்தனர்.