Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 177 நிவாரண மையங்களில் 12,315 பேர்

தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 177 நிவாரண மையங்களில் புயல், மழையால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த12,315 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்கும் விதமாக நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என்.சுப்பையன் பாபநாசம் வட்டம் களஞ்சேரி வெண்ணாற்றங்கரையில் ஆய்வு செய்தார்.

பின்னர், பட்டுக்கோட்டை பகுதிக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் என்.சுப்பையன் கூறியது: புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புயல் வேறு பகுதிக்கு சென்றாலும் இப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்.

மழை மிக அதிகமாக இருக்கும்போது, பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும். சூழல் சரியானவுடன் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும். எனவே, மின்சாரம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

மாவட்டத்தில் 78 இடங்களில் நிவாரண முகாம்களில் 972 ஆண்கள், 1,477 பெண்கள், 754 குழந்தைகள் என மொத்தம் 3,203 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு வசதி செய்யப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்க தேவையான அளவு படகுகள் கையிருப்பில் உள்ளன என்றார்.

ஆய்வின்போது, ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாகை, மயிலாடுதுறையில்...

நாகை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் எச்சரிக்கையை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில், 24 மணிநேர அவசர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புயல் பாதிப்பு தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண், 04365 251992, 83006 81077 மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை 04365 248119, 94981 00905 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மின் துறை தொடர்பான புகார்களை 1912, 04365 290261 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாவட்டத்தில் பொதுமக்களை பேரிடர் காலங்களில் தங்க வைத்து பராமரிக்க 9 பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள், 66 பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் என மொத்தம் 99 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் நாகை மாவட்டத்தில் 7,876 பேர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,236 பேர் என மொத்தம் 9,112 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான மின்சாரம், உணவு, குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சி சார்பில் 50,200 மணல் மூட்டைகள், 21,290 சவுக்கு மரங்கள், மின்சார துறை சார்பில் 12,750 மின் கம்பங்கள், 6 மின் மாற்றிகள், 90 கிமீ தொலைவுக்கான மின் கம்பிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 2,256 மின் ஊழியர்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

நிவாரணப்பணிக்காக 27 படகுகள், 19 பொக்லைன்கள், 139 மின் மரம் அறுக்கும் கருவிகள், 56 ஜெனரேட்டர்கள், 31 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 26 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 21 புகையடிக்கும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. காவல் துறை சார்பில் 180 காவலர்கள், 120 பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற காவலர்கள் உள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x