

வேலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரபல பிரியாணி கடையின் உரிமையாளர் மோகன் (59). இவரது வீடு வேலூர் கொசப்பேட்டை விவேகானந்தர் தெருவில் உள்ளது. முதுகு தண்டுவட சிகிச்சைக்காக சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் மோகன் கடந்த 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இதனால், அவரது குடும்பத்தினர் சென்னையில் தங்கியுள்ளனர். மோகனின் மகன் ஹரிஷ் (20) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தபோது பீரோவை உடைக் கப்பட்டு அதிலிருந்த 250 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராவின் வயர்களை துண்டித்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்துக்கு ஹரிஷ் தகவல் தெரிவித்தார். அதன் பேரில், வேலூர் சரக டிஐஜி காமினி, எஸ்பி செல்வகுமார், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கலால் பிரிவுதுணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தொடர்பாக 3 தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டின் மற்றொரு பீரோவில் இருந்த பணம், நகைகள் அப்படியே இருப்பதால், அது தொடர் பாகவும் விசாரித்து நடத்தி வருகின்றனர்.