

கனரா வங்கியின் 115-வது நிறுவனர் நாள் விழாவையொட்டி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்த 128 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சத்து 82500 மதிப்பிலான கல்வி உதவித்தொகையை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, "பள்ளிகளில் நடைபெறும்அனைத்து வகையான போட்டிகளிலும் தன்னம்பிக்கையுடன் பங்கேற்று, தங்களது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சாதனை மேற்கொள்ள வேண்டும். உதவித்தொகை பெறும் மாணவிகள் நல்ல முறையில் கல்வி பயின்று, வாழ்வில் மேலும் உயர வேண்டும்" என்றார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 34 பள்ளிகளைச் சேர்ந்த 5-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 63 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2500, 8-ம் வகுப்பு முதல்10-ம் வகுப்பு வரை பயிலும் 68 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5000 என 128 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சத்து 82500 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ், கனரா வங்கி மண்டல துணைப் பொது மேலாளர் ஹரிநாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர், பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு உதவித்தொகை வழங்கிய ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர்.