Published : 22 Nov 2020 03:14 am

Updated : 22 Nov 2020 03:14 am

 

Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

புதிய முறைப்படி அமைக்கப்படும் மரக்கரி உற்பத்தி ஆலைகளுக்கு மட்டும் அனுமதி தென் மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

புதிய முறைப்படி அமைக்கப்படும் மரக்கரி உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா வீராணம்பாளையம் பகுதியில் மரக்கரி தொழிற்சாலை அமைக்க, கிராம ஊராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தனியார் நிறுவனம் உரிய அனுமதிபெற்று பணிகளைத் தொடங்கியது.


அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் பணிகள் முடிக்காத நிலையில், அனுமதி காலத்தை நீட்டிக்க வீராணம்பாளையம் ஊராட்சியில் கோரப்பட்டது. இதுபோன்ற தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வருவதால், ஏற்கெனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட மரக்கரி நிறுவனமும், அதே பகுதியில் ஏற்கெனவே இயங்கி வந்த மரக்கரி நிறுவனங்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மேற்கண்ட பகுதியில் மரக்கரி தொழிற்சாலைகள் இயங்குவதால் காற்று மாசு, நிலத்தரி நீர் மாசு, வேளாண் நிலங்கள் பாதிப்பு ஏற்படுவதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஓசோன் கேர் பொதுநலச் சங்கம் வழக்கு தொடர்ந்தது. மேற்கண்ட வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.

சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றை சேர்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப் பட்டது.

காங்கயம் நகராட்சிக்கு அபராதம்

அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், "மரக்கரி ஆலைகளால் நிலத்தடி நீர்,வேளாண் நிலங்கள், காற்று மாசுபட்டுள்ளது. அங்கு இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளது. அதே பகுதியில் விதிகளை மீறி காங்கயம் நகராட்சி குப்பை கொட்டி வருகிறது. மரக்கரி தயாரிக்க, நிலப்பரப்புக்கு மேல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அங்குநிலத்துக்கடியில் பழையமுறைப்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய6 மரக்கரி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மொத்தம் ரூ.20 லட்சத்து 15 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கலாம். விதிகளை மீறி குப்பைகொட்டி வந்த நகராட்சியிடம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கலாம். இத்தொகையில் இருந்து, பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களின் உரிமையாளர்கள் 4 பேருக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து800 இழப்பீடாகவழங்கலாம். அதே பகுதியில் அமைந்துள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை வேறு இடங்களில் அமைக்க ஆகும் செலவுரூ.12 லட்சத்தையும், இந்த இழப்பீட்டுத் தொகையில் இருந்து வழங்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், "தொடர்புடைய கிராமத்தில் பழைய முறைப்படி செயல்பட்டுவரும் அனைத்து மரக்கரி ஆலைகளையும் உடனடியாக மூட வேண்டும். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, ஆலையை மாற்றம் செய்து உரிய அனுமதி பெற்றுசெயல்படலாம்.

வல்லுநர் குழு பரிந்துரைத்த அபராதத் தொகையை தொடர்புடையவர்களிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். இப்பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் தென் மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய அனைத்திலும், இனி புதிய முறையில் மரக்கரி தொழிற்சாலைகளை அமைக்க மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைப்பிடிக்காத காங்கயம் நகராட்சி மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x