Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

தஞ்சாவூர் பூச்சந்தை சாலையில் நெரிசல் அதிகரிப்பு ஆக்கிரமிப்பை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் பூச்சந்தை சாலையில், ஆக்கிரமிப்புகள் காரணமாக தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், நேற்று ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

தஞ்சாவூரில் உள்ள பூச்சந்தை சாலை பகுதியில் பூச்சந்தை, காய்கறி சந்தை, ஏலச்சந்தை, அரிசிக் கடைகள், இறைச்சிக் கடைகள், பழக்கடைகள் ஆகியவற்றுடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் இடங்கள் உள்ளன. இதனால், இந்தப் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் நெரிசல் மிகுந்து காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்தச் சாலையின் இரு பகுதிகளிலும் உள்ள கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து, கீற்று மற்றும் ஆஸ்பெட்டாஸ் சீட் மூலம் கொட்டகைகள் அமைக் கப்பட்டிருந்தன. சில கடைகளின் முன்பு சிமென்ட் தளமும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சாலை வழியாக முன்னர் பேருந்து போக்குவரத்து இருந்துவந்த நிலையில், சாந்தப்பிள்ளைகேட் பகுதியில் மேம்பாலம் கட்டத் தொடங்கியதில் இருந்து, பேருந்து போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பூச்சந்தை சாலையும் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிக்கொண்டே வந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமானது.

இதையடுத்து, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டது. அப்போதெல்லாம், வியாபாரிகள் கேட்டுக்கொண்டதன்பேரில், ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள அவர்களுக்கு அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனாலும், அதிக மானோர் ஆக்கிரமிப்புகளை அகற் றாத நிலையில், சுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டி விழா முடிவடைந்த பின்னர், ஆக்கிர மிப்புகளை அகற்றுவது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பூச்சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில், கடைகள் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. சிமென்ட் தளங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. சில கடைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே கொட்டகைகளை அகற்றிக்கொண்டனர்.

இந்தப் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதை யொட்டி, அங்கு அசம்பாவிதம் ஏதும் நேரிடாமல் இருக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றதால், இந்தச் சாலையின் போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், “பூச்சந்தை பகுதியில் இனியும் ஆக்கிரமிப்பு நிகழாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், இந்தச் சாலையில் பேருந்து போக்குவரத்து இருந்தால் பொதுமக்கள் வந்துசெல்ல எளிதாக இருக்கும். மேலும் சாலையும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கும். எனவே, பூச்சந்தை வழியாக ஏற்கெனவே இயக்கப்பட்ட நகரப் பேருந்தை(தடம் எண் 54) மீண்டும் இயக்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x