சாதியை கூறி விரட்டியதாக கூறப்பட்ட விவகாரம் வியாபாரி பொய் புகார் அளித்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் மக்கள் மனு

சாதியை கூறி விரட்டியதாக கூறப்பட்ட விவகாரம் வியாபாரி பொய் புகார் அளித்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் மக்கள் மனு
Updated on
1 min read

சாதியைக் கூறி ஊரை விட்டு விரட்டியதாக மாட்டு வியாபாரி புகார் அளித்த விவகாரத்தில், பொய் புகார் அளித்துள்ளதாக அவருக்கு எதிராக ஊர் பொதுமக்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த மாட்டு வியாபாரி எம்.குமார் (38), தான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், வீட்டை சேதப்படுத்தி, என்னையும் குடும்பத்தினரையும் ஊர் மக்கள் விரட்டிவிட்டனர் என்றும், இதற்குகுன்னத்தூர் காவல் துறையினர் உடந்தையாக உள்ளனர் என்றும், கடந்த 10-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், காவல் துணைக் கண்காணிப்பாளர் எல்.பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மேற்கூறப்பட்ட குருவாயூரப்பன் நகர் பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

அதில், "குமார் எங்களது ஊரைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும், பல நாட்களாக எங்களது பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் நடப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 7-ம் தேதி இதேபோல நடந்துகொண்டதால், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் என்பவரை அழைத்துக் கொண்டு, குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

இதனால், அவரே வீட்டை காலிசெய்து வி்ட்டு சென்றார். ஆனால், உண்மை தகவல்களை மறைத்து, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது பொய் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, 'என்று குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in