பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கி கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபர் 9 மாதங்களுக்கு பின் கைது 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கி கொள்ளை சம்பவத்தில்  முக்கிய நபர் 9 மாதங்களுக்கு பின் கைது 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டவர், 9 மாத தேடலுக்குப் பிறகு கைது செய்யப் பட்டுள்ளார். அவரை 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இரவு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து அதிக அளவிலான தங்க நகைகள், வங்கிப் பணம் ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மேற்குமண்டல சரகஐஜி பெரியய்யா உத்தரவின்பேரிலும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் மேற்பார்வையிலும் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில்ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜே.அனில்குமார் பன்வார், ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த ராமகிருஷ்ண ஆச்சாரி, ராமன்ஜீ அப்பா, ராஜஸ்தானை சேர்ந்த இசார் கான்ஆகியோர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 86 பவுன் தங்க நகைகள்,ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டம் தோடாபீம் தாலுகாவை சேர்ந்த எஸ்.கெஜ்ராஜ் (33) என்பவரை தொடர்ந்து தேடி வந்தனர். ஹரியானாவில் வேறு ஒரு குற்ற வழக்கில் அவர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அங்கு போலீஸார் நடத்திய விசாரணையில், திருப்பூர் வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி,பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் மனு தாக்கல்செய்தனர். இந்த மனு மாஜிஸ்திரேட் ஹரிராம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பலத்த பாதுகாப்புடன் கெஜ்ராஜை ஹரியானா போலீஸார் அழைத்து வந்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.சி.ராமச் சந்திரன், காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ஜி.ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீஸார் அவரை தனி இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in