

மதுரையில் அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களையும், இரவுப் பணி முடிந்து வீட்டுக்குச் செல்பவர்களையும் சாலையில் கூட்டமாகத் திரியும் நாய்கள் துரத்துவதால் பலர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
தெரு நாய்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு ஒரு விதத்தில் பாதுகாவலனாக இருந்தாலும் மற்றொருபுறம் அவற்றின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால் பெருகி வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைக்காமல் ஆக்ரோஷ மன நிலைக்கு மாறியுள்ளன.
குறிப்பாக தெரு நாய்களால் நடை பயிற்சி செல்பவர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளன. கே.கே. நகர் சுந்தரம் பூங்காவில் நடை பாதைகள் தெரு நாய்கள் ஓய்வெடுக்கும் இடமாக உள்ளது. இங்கு முதியவர்கள், பெண்கள் நடை பயிற்சி செல்ல அச்சப்படுகின்றனர்.
மதுரையில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இரவுப் பணி முடிந்து நள்ளிரவில் பைக்குகளிலும், சைக்கிள்களிலும் வீடுகளுக்குத் திரும்பும் தொழிலாளர்களை நாய்கள் குரைத்தவாறு துரத்தி வருகின்றன. அப்போது கீழே விழுந்தால் கடித்து குதறும் அபாயமும் உள்ளது. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி முன்பு போன்று நடவடிக்கை எடுப்பதில்லை என நகர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாநகராட்சி அதிகாரி கூறும்போது, தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. ஆனால் புதிய நாய்கள், நகர் பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. அவை 6 மாதங்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்வதால் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரையில் 47,000 தெரு நாய்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்றார்.