Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

வாணியாறு அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை தொப்பையாறு அணைக்கு வழங்க கோரிக்கை

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் உபரிநீரை தொப்பையாறு அணைக்கு திருப்பி விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வாணி யாறு, தொப்பையாறு உட்பட 8 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் பெரிய அணை வாணியாறு அணை. 10 ஆயிரத்து 400 ஏக்கர் பாசனப் பரப்பு கொண்டது இந்த அணை. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் நீண்டிருக்கும் சேர்வராயன் மலைத்தொடரில் பெய்யும் மழையால் வாணியாறு அணை தண்ணீர் பெறுகிறது. இந்த அணையில் 65.27 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வாணியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. எனவே, வேகமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 63 அடியை நெருங்கத் தொடங்கியதால் கடந்த 14-ம் தேதி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு வெளியேறும் உபரிநீர் தென்கரைக்கோட்டை உள்ளிட்ட பிரதான 6 ஏரிகளை நிறைத்த பின்னர் அரூர் வழியாகச் சென்று தென்பெண்ணை ஆற்றில் கலந்து விடும்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவு தண்ணீருடன் காட்சியளிக்கும் தொப்பையாறு அணைக்கு வாணியாறு அணையின் உபரிநீரை வழங்க வேண்டும் என்று தொப்பையாறு பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘வாணியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்கிறது. தற்போது வெளியேற்றப்படும் உபரிநீரை தொப்பூர் அருகிலுள்ள தொப்பையாறு அணைக்கு கொண்டு செல்ல இயற்கையாகவே நீர்வழித்தட இணைப்பு வசதி உள்ளது.

இதன்மூலம் தொப்பையாறு அணைக்கு உபரிநீரை திருப்பி விட்டால், இனிமேல் பெய்யும் மழையின் அளவுக்கு ஏற்ப தொப்பையாறு அணை முழுமையாகவோ அல்லது பாதி அளவோ நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே, வாணியாறு அணை உபரி நீரை தொப்பையாறு அணைக்கு நடப்பு ஆண்டிலேயே வழங்கி விவசாயிகளின் நலன் காத்து உதவிட வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x