Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

சுவாமிமலையில் சூரசம்ஹார விழாபக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வாக விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் சண்முகசுவாமி மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் உள்பிரகாரத்தில் மட்டுமே சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. காலை முதல் மதியம் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் சூரசம்ஹாரத்தையொட்டி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

அதன்பின், நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடம் சக்திவேல் வாங்கி, கோயில் உள் பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x