Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

வண்டலூர் வட்டத்தில் உள்ள தாழம்பூரில் 150 ஏக்கர் அனாதீன நிலப் பட்டா ரத்துஆக்கிரமிப்புக்கு துணைபோன 3 அதிகாரிகள் மீது வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் உள்ள தாழம்பூர் கிராமத்தில், 570 ஏக்கர் அனாதீன நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு வருவாய்த் துறையினர் சிலர் முறைகேடாக பட்டா வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர் ராஜா என்பவர் அரசு சார்பில் தனக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கு, வேறு ஒருவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம், குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், தாழம்பூரில் உள்ள அனாதீன 570 ஏக்கர் நிலத்தில், 250 ஏக்கர் நிலத்துக்கு பெருமாள்சாமி என்பவருக்கு அரசு விதிமுறைப்படி பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 170 ஏக்கர் அனாதீன நிலத்தில் அரசு ஆவணங்களில் திருத்தம் செய்யப்படவில்லை. மீதி உள்ள 150 ஏக்கர் நிலங்களுக்கு பல்வேறு பெயர்களில் பட்டா வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவுப்படி 150 ஏக்கர் நிலத்துக்கான பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்ட நிலச்சீர்திருத்த முன்னாள் இணை ஆணையர் பாலசுப்பிரமணியம், உதவி ஆணையர் பழனியம்மாள், முன்னாள் செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்து வடிவேல் ஆகியோர் மீது, காஞ்சிபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாலசுப்பிரமணியம் பணி நிறைவுபெற்று இறந்துவிட்டார். பழனியம்மாள், முத்து வடிவேலு ஆகியோர் டிஆர்ஓவாகப் பதவி வகித்து வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதாவது: வண்டலூர் வட்டம், தாழம்பூர் கிராமத்தில் 150 ஏக்கர் நிலத்துக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுக்கு உதவியாக இருந்த 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடைபெறும்.

மேலும் இந்த அனாதீன நிலத்தில் 40 ஏக்கர் நிலம் குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதில் 25 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமித்து 600 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள 85 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர், இரும்பு வேலி உள்ளிட்டவை மூல ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அனாதீன நிலம் தொடர்பாக அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x