Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

போலி ஆவணம் மூலம் மோசடி செய்த முதியவரின் 2.5 ஏக்கர் நிலம் மீட்பு

தூத்துக்குடி: எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி, நியூகாலனி கருப்பசாமி கோயில்தெருவைச் சேர்ந்தவர்ஆறுமுகவேல் (73). ஓட்டப்பிடாரம் வட்டம் மேல அரசடி கிராமத்தில் இவரது முன்னோர்களுக்கு பாத்தியப்பட்ட 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. 9 பேர் கொண்ட கும்பல் கூட்டுச்சதி மற்றும் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்து இந்தச் சொத்தை அப கரித்துக்கொண்டனர். இதுதொடர்பாக ஆறுமுகவேல் கடந்த மே 16-ம் தேதி அளித்த புகாரின்பேரில் புதியம்புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். நீண்ட நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆறுமுகவேல் தூத்துக்குடி எஸ்பியை நேரில் சந்தித்து, தனது சொத்தை மீட்டுத்தருமாறு புகார் அளித்தார்.

எஸ்.பி. நேரடியாக இதில் தலையிட்டு, ஆறுமுகவேலின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி பொன்னரசு, புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டரின் துரித நடவடிக்கையால், ஒரு வாரத்துக்குள் போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து ஆறுமுகவேலின் சொத்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2.5 ஏக்கர் நிலத்துக்குரிய சொத்து பத்திரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று ஆறுமுகவேலிடம் ஒப்படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x