Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நீலகிரியில் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம்

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை, திருப்பூர் ஆட்சியர்

அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், திருப்பூர் ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார்.

மேலும், அதன் நகல்கள் மற்றும் குறுந்தகடுகள் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டன.

தாராபுரம் (தனி) தொகுதியில் 298 வாக்குச்சாவடிகளும், 1,25,773 ஆண், 1,30,946 பெண், மூன்றாம் பாலினத்தவர் 10 என 2,56,729 வாக்காளர்களும், காங்கயத்தில் 294 வாக்குச்சாவடிகள், 1,23,963 ஆண், 1,29,885 பெண், மூன்றாம் பாலினத்தவர் 22 என 2,53,870 வாக்காளர்களும் உள்ளனர்.

அவிநாசி (தனி) தொகுதியில் 312 வாக்குச்சாவடிகளும், 1,33,498 ஆண், 1,39,805 பெண், மூன்றாம் பாலினத்தவர் 1 என 2,73,304 வாக்காளர்களும், திருப்பூர் (வடக்கு) தொகுதியில் 362 வாக்குச்சாவடிகளும், 1,87,029 ஆண், 1,79,417 பெண், மூன்றாம் பாலினத்தவர் 97 என 3,66,543 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

திருப்பூர் (தெற்கு) தொகுதியில் 240 வாக்குச்சாவடிகளும், 1,35,830 ஆண், 1,32,052 பெண், மூன்றாம் பாலினத்தவர் 30 என 2,67,912 வாக்காளர்களும், பல்லடத்தில் 407 வாக்குச்சாவடிகளும், 1,87,926 ஆண், 1,87,852 பெண், மூன்றாம் பாலினத்தவர் 60 என 3,75,838 வாக்காளர்களும் உள்ளனர்.

உடுமலைப்பேட்டை தொகுதியில் 293 வாக்குச்சாவடிகளும், 1,28,421 ஆண், 1,36,784 பெண், மூன்றாம் பாலினத்தவர் 23 என 2,65,228 வாக்காளர்களும், மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகளும், 1,20,335 ஆண், 1,24,068 பெண், மூன்றாம் பாலினத்தவர் 15 என 2,44,418 வாக்காளர்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 3 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர்.

5 தொகுதிகளில் பெண்கள் அதிகம்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தாராபுரம், காங்கயம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு...

பின்னர் ஆட்சியர் கூறும்போது, "கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் இதர விவரங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காக 22,744 கோரிக்கைகள் பெறப்பட்டன. அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்களின் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில், பொதுமக்கள் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல்கள் வைக்கப்பட்டிருக்கும். பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்" என்றார்.

வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

உதகை

நீலகிரி மாவட்டம் உதகையில் வரைவு வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார்.

அதன்படி, உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 96,442 ஆண், 1,04,468 பெண், மூன்றாம் பாலினத்தவர் 7 என 2,00,917 வாக்காளர்கள், கூடலூர் தொகுதியில் 90,051 ஆண், 94,305 பெண், மூன்றாம் பாலினத்தவர் 2 என 1,84,357 வாக்காளர்கள், குன்னூரில் 89,052 ஆண், 97,424 பெண், மூன்றாம் பாலினத்தவர் 3 என 1,86,479 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

4938 வாக்காளர்கள் நீக்கம்

ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியிலில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 691 பேர் இடம்பெற்றிருந்தனர். புதிதாக பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் இடம்மாறிய வாக்காளர்கள் பெயர் நீக்கம் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில், 4,938 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x