

திருப்பூர் மாநகரின் பெரும்பாலான வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் மிக அதிகளவில் உள்ள நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநகரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் விநியோகிக்கப்பட்டு, விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் செல்ல தொடங்கினர். இதனால், திருப்பூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாநகரின் பிரதான வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்ததால், நேற்று இரவு வரை போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் சாலையோர வியாபாரி ஒருவர் கூறும்போது, "கரோனா ஊரடங்கால் மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும்வெடி பொருட்கள் தேவையான அளவு வாங்குகிறார்கள். கரோனா தொற்றால் வேலை இழப்பு, சம்பளகுறைப்பு நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கியதால், வழக்கமான தீபாவளி விற்பனைஇம்முறை இல்லை. வழக்கத்தை காட்டிலும் 35 முதல் 40 சதவீதம்வியாபாரம் குறைவுதான்.
கரோனா ஊரடங்கு மற்றும் பள்ளிகள் திறக்கப்படாததால், பலரும் சொந்த ஊர்களிலும் குடும்பங்களை விட்டுவிட்டு திருப்பூரிலும் தங்கி வேலை செய்யும் சூழல் உள்ளது. வழக்கமான கூட்டம் இம்முறை பேருந்துகளில் இருக்காது. அதேசமயம், ரயில் போக்குவரத்து இல்லாததால், பொதுப்போக்குவரத்தான பேருந்துகளையே மக்கள் அதிகம் நாடுகின்றனர்" என்றார்.