

திருப்பூர் செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் வசித்து வந்தவரும் கேரள மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்தவருமான என்.மதன் (எ) முகமது சபி (29), கடந்த செப்டம்பர் மாதம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (38) என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் அவிநாசி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் மீது ஏற்கெனவே திருப்பூர், பல்லடம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது சபியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார்.