

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே குழந்தைகள் உதவி மையம் சார்பில், ரயில்வே குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ரயில் நிலையத்துக்கு ஆதரவற்ற சூழலில் வரும் குழந்தைகளை மீட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது குறித்தும், குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி எண் 182 குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ரயில்வே சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு வரவேற்றார். ரயில் நிலைய மேலாளர் சுனில் ராம் தலைமை வகித்தார். ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பிரதீப் மற்றும் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் மற்றும் ரயில் பயணிகள் கரோனா தடுப்பு சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் வலியுறுத்தினார்.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் பேசினார். நிகழ்ச்சியில் ரயில்வே வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ரயில் நிலைய குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.