

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 8 இடங்களில் நேற்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தினமும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனுக்களை அளிக்கின்றனர். இந்த மனுக்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் நீண்ட நாட்கள் நிலுவையில் வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் 8 காவல் துணை கோட்டங்களிலும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி முதலாவது சிறப்பு முகாம் நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இதனை தொடர்ந்து 2-வது சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி நகர துணை கோட்டத்துக்கான முகாம் சிதம்பர நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்திலும், தூத்துக்குடி ஊரக துணை கோட்டத்துக்கான முகாம் புதுக்கோட்டை சத்யா மஹாலிலும் நடைபெற்றது. இந்த முகாம்களை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.
இதேபோல் ஸ்ரீவைகுண்டம் துணைக் கோட்டத்துக்கு குமரகுருபரர் நடுநிலைப்பள்ளி, திருச்செந்தூருக்கு எழுவர் சாலியர் மடம், சாத்தான்குளத்துக்கு டிடிடிஏ புலமாடன் செட்டியார் மேல் நிலைப்பள்ளி, மணியாச்சிக்கு ஓட்டபிடாரம் டிஎம்பி மெக்காவாய் பள்ளி, விளாத்திக்குளத்துக்கு முருகையா நாடார் திருமண மண்டபம், கோவில்பட்டிக்கு ஆயுர் வைஸ்யா மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறியதாவது:
காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில் புகார் அளித்த மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் ஆகிய இரு தரப்பினரும் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்தப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
மேலும், பதிவு செய்துள்ள வழக்குகளில் புலன் விசாரணை செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டால் அவ்வழக்கின் மனுதாரர்களுக்கு அதற்கான காரணங்களை சட்டப்படி தெரிவித்து வழக்கு விசாரணை முடிக்கப்படும். அவ்வாறு காவல் நிலைய அதிகாரிகள் வழக்குகளை முடித்து வைத்ததில் ஏதேனும் குறைகள் இருந்தால் மேலதிகாரிகள் மற்றும் என்னிடம் புகார் அளிக்கலாம் என்றார்.
முகாமில் தூத்துக்குடி டிஎஸ்பிகள் கணேஷ், (பயிற்சி) சஞ்சீவ் குமார் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.