

திண்டுக்கல் அருகே திருமணமான பெண்ணை கடத்திச் செல்ல முயற்சித்த நபரை பிடித்த கிராம மக்கள், அவரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அருகே கோவுகவுண்டம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் மகள் கலைச்செல்வி(21). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வி காணாமல் போயுள்ளார். நாகராஜன் தனது மகளை தேடியுள்ளார். பின்னர், சென்னையில் இருந்து மகளை மீட்டு ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கோவுகவுண்டன் பட்டியில் சந்தேகத்துக்கிடமான வகையில் காரில் வந்தவரிடம் கிராம மக்கள் விசாரித்துள்ளனர். அவர், சென்னையைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் என்றும், அவருடன்தான் கலைச்செல்வி சென்னையில் தங்கியிருந்தார் என்றும் தெரியவந்தது. தற்போது மீண்டும் கலைச்செல்வியை அழைத்துச் செல்ல அவர் வந்துள்ளதை அறிந்த கிராம மக்கள், வடமதுரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தாமரைக்கண்ணனை அங்கிருந்து அனுப்பி வைக்க போலீஸார் முயன்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கிராம மக்கள், பெண்ணை கடத்திச் செல்ல வந்த தாமரைக்கண்ணனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, விசாரணைக்காக தாமரைக்கண்ணன் மற்றும் கிராம மக்கள் சிலரை காவல்நிலையத்துக்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.