

சூளகிரி அருகே ரூ.65 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்ட, கோபாலபண்டிகன் ஏரியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளியில் கோபாலபண்டிகன் ஏரி உள்ளது. ரூ.65 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ள ஏரியை நேற்று ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
பத்தலப்பள்ளியில் சுமார் 26.65 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோபாலபண்டிகன் ஏரி ஓசூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி நிதியில் ரூ.65 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. இங்கு மழைக்காலங்களில் உபரி நீர் வெளியேறும் வகையில் சிமென்ட் கான்கிரீட் கொண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கரைகள் சுமார் 10 மீட்டர் அளவுக்கு உயரமாகவும், ஏரியில் நடுவே மரக்கன்றுகள் நட மண் திட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரியைச்சுற்றி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஏரி முழுமையாக தூர் வாரப்பட்டுள்ளதால் மழைக் காலத்தில் அதிக அளவு நீர் சேமிக்கப்பட்டு இப்பகுதியைச் சுற்றிலும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.
மேலும் விவசாயிகள் இப்பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சாலை விரைவில் அமைத்துதரப்படும்.இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், பாலாஜி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.