

கொடைக்கானலின் புதிய மாஸ்டர் பிளானில் பன்முக பயன்பாட்டு பகுதியை விவசாய மண்டலமாக மாற்றியது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சொக்கப்பன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் எனக்கு 47 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் 1993 மாஸ்டர் பிளானில் அனைத்து வித பயன்பாட்டுக்கும் ஏற்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது புதிய மாஸ்டர் பிளானில் இடம் அமைந்திருக்கும் பகுதி விவசாய மண்டலமாகவும், கட்டிடம் கட்டுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1993 மாஸ்டர்பிளான் அடிப்படையில் பழைய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, பன்முக பயன்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியை, விவசாய மண்டலமாக அறிவித்தது ஏன்? என்பது குறித்து வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 30-க்கு ஒத்திவைத்தனர்.