

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
மாநகரச் செயலாளர் சரோஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பூமயில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி மற்றும் 31-வது வார்டு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலனிடம் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி மாநகராட்சி 31-வது வார்டு வழியாகச் செல்லும் பக்கிள் ஓடை பழுதடைந்து கழிவுகள், அமலைச் செடிகள், குப்பைகள் மிகுந்து காணப்படுகிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகின்றன. இதனால் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனனர்.
பகலிலும் கொசுக்கள் வருகின்றன. மாலை 5 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து பக்கிள் ஓடை முழுவதும் உள்ள குப்பைகள், அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.