

தென் தமிழகத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கான உதவிகளை அரசு செய்யும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் டிராவல்ஸ் கிளப் சார்பில் கரோனா நேரத்தில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலாவை விரைவில் மீட்டெடுப்பது, தென் தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களைப் பிரபலப்படுத்துவது, மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவது ஆகியன குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசியதாவது:
கரோனா ஊரடங்கு தளர்வுகளை மருத்துவக் குழுவினர், அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்து முதல்வர் அறிவித்துள்ளார். இதைப் பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தென் தமிழகத்தில் சுற்றுலா மேம்பாடு, முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு உறுதியாகச் செய்யும் என்றார். இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை விமான நிலைய அதிகாரி சுந்தரவளவன், தென் தமிழகத்தின் சுற்றுலாத் துறை சார்ந்த வெளிநாட்டு-உள்நாட்டு சுற்றுலா ஆப்பரேட்டர்ஸ், உள்நாட்டு-வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள், சுற்றுலா சம்பந்தமான அதிகாரிகள், தொழில் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.