

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆவின் மூலம் ரூ. 60 லட்சத்துக்கு இனிப்பு வகைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டபோது தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் மூலம் 24 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது பால் கொள்முதல் 31 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது. இதேபோல 21ஆயிரம் லிட்டராக இருந்த பால் விற்பனை 27.5 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் மூலம் மாவட்டத்தில் உள்ள 285 முகவர்கள் வாயிலாக 7,000 லிட்டரும், 165 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3,000 லிட்டரும் நெய் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுபோல் இனிப்பு வகைகள், தரம் உயா்த்தப்பட்ட பால் உபபொருட்கள் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தூத்துக்குடி மாநகராட்சி வளாகம், சிவன் கோயில் வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகனேரி ஹைடெக் பார்லா் ஆகிய இடங்களில் ஆவின் சிறப்பு விற்பனை பாலகம் தொடங்கப்படுகிறது.
இங்கு ஆவின் நெய், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கீரிம்கள், இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் ராமசாமி, துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், மேலாளர்கள் அனுஷா சிங் (விற்பனை), சாந்தகுமார் (திட்டம்), சுப்பிரமணியன் (கணக்கு), துணை மேலாளர்கள் வெங்கடேஷ்வரி, பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.