

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நகரம் கடந்த 1.11.1866-ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப் பட்டது. அப்போது, 19,447 ஆக இருந்த மக்கள்தொகை, தற்போது 71,600 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, 4.5 ச.கி.மீ பரப்பளவாக இருந்த நகரம், 125 ஆண்டுகளுக்கு முன்பு 11.55 ச.கி.மீ பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன்பிறகு மக்கள்தொகைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்படாத தால், தற்போது வரை அந்த பரப்பளவே நீடிக்கிறது. இதன் காரணமாக நகராட்சிக்கு பெரிய அளவில் வரி வருமானம் இல்லை. மேலும், மன்னார்குடி நகரம் மாவட்டத் தலைநகரமாகவும், மாநகராட்சி யாகவும் தரம் உயர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு அடிப்படையாக நகராட்சி விரிவாக்கம், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள பாரம்பரிய அடை யாளங்களை மீட்பது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது: மன்னார்குடி நகரம் கட்டமைக்கப்பட்ட போதே நீராதார தேவையை பூர்த்தி செய்ய வடுவூர் வடவாற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர தனியாக 12 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட வாய்க்கால் பயன்படுத்தப்படாமலும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. இந்த வாய்க் காலை மட்டுமின்றி, நகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும், அவற்றின் வரத்து வாய்க்கால் களையும் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர் அருணகிரி கூறியபோது, “மன்னார்குடியில் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில், தெருக்களின் பின் புறத்தில் உள்ள நாராசம் என்ற பிரத்யேக கழிவுகள் வெளியேற்றப் பாதை ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்” என்றார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.எஸ்.ராஜேந்திரன் கூறிய தாவது: நெடுவாக்கோட்டை, அசேஷம், கர்ணாவூர் ஊராட்சிகளையும், லக்கனாம் பேட்டை, குறுவை மொழி கிராமங்களையும் இணைத்து, மன்னார்குடி நகராட் சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கடந்த 2000-ம் ஆண்டில் நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், கோரிக்கை நிறைவேறவில்லை. எனவே, மன்னார்குடி நகராட்சியை விரிவாக்கம் செய்வதுடன், நகராட்சி தொடங்கி நேற்றுடன்(அக்.31) 154 ஆண்டுகள் நிறை வடைந்ததை சிறப்பிக்கும் வகை யில், சிறப்பு அந்தஸ்துடன் கூடிய நகராட்சியாகவும் அறிவிக்க வேண்டும் என்றார்.