

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்விநியோக செயற்பொறி யாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
விவசாயிகளுக்கு தத்கல் முறையில் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள பூவுடையார்புரத்தை சேர்ந்த விவசாயி முத்துலிங்கம் இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு தத்கல் முறையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விண்ணப்பித்தார். இதையடுத்து மின் இணைப்பு வழங்குவதற்காக அவரிடம், திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதலில் மறுத்த முத்துலிங்கம் பின்னர் பணத்தை கொடுக்க சம்மதித்தார். இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸில் அவர் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.10,000 பணத்துடன் நேற்று காலை முத்துலிங்கம் திருச்செந்தூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று செயற்பொறியாளர் பொன் கருப்பசாமியிடம் கொடுத்துள்ளார். அப்போது, ஏற்கெனவே அங்கு மறைந்திருந்த போலீஸார் அவரை கைது செய்தனர். தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி (பொறுப்பு) எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெய, சிறப்பு எஸ்ஐ பாண்டி மற்றும் போலீஸார் பொன் கருப்பசாமியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.வீட்டிலிருந்து ரூ.3.73 லட்சம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரை தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.