

தமிழகத்தில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை கல்வித்தகுதியைப் பார்க்காமல் உயர் பதவிகளில் நியமிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறன் வீரர் மதுரேசன். இவர் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் 90 பதக்கங்களைக் குவித்துள்ளார். இவர் மாற்றுத்திறன் வீரர்களுக்கு பொதுவான வீரர்களுக்கு வழங்குவது போல் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் முத்துகீதையன் வாதிடுகையில், மனுதாரர் 9-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். இதனால் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
வழக்கறிஞர் கே.சாமிதுரை வாதிடுகையில், தமிழக அரசு 2019-ல் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், இதன்படி மாற்றுத்திறன் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாக்சிங் வீரர் மேரி கோம் 8-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் பிளஸ் 2 தான் படித்துள்ளார். அவர் பஞ்சாபில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ், உயர் நிலைக் கல்வியைத் தாண்டவில்லை. அவர் ரிசர்வ் வங்கி உதவி மேலாளாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், தமிழகத்தில் மாற்றுத் திறன் வீரர்களை மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும். மனுதாரர் மற்றும் மனுதாரரைப் போன்ற வீரர்களை தமிழக அரசு அங்கீகரிக்கும் என நீதிமன்றம் நம்புகிறது.
இந்த மனு தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் 10.11.2020-ல் பதில் அளிக்க வேண்டும். தவறினால், காணொலிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
மத்திய அரசு பொதுவான வீரர்களுக்கு வழங்குவது போல் மாற்றுத்திறன் போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் சாதனை நிகழ்த்துபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்துவது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு மனுதாரருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும், மாற்றுத்திறன் வீரர்களுக்கான பரிசுத் தொகையை உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசா ணையை அமல்படுத்துவது தொடர் பாகவும் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.