

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக பொறுப்பேற்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகளுக்கு தடை இருந்தாலும் சட்ட விரோத மணல்கடத்தல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இவர்களில் பலர் அரசியல் பின்புலத்துடன் இயங்குவதால் இவர்களை புதியஆட்சியரால் தடுப்பது பெரும்சவால்களில் ஒன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் கல்குவாரிகள் பல விதிமுறைகளை பின்பற்று வதில்லை. அளவுக்கு அதிகமான ஆழத்தில் கனிம வளங்களை சுரண்டுதல், அவற்றை எடுத்துச் செல்லும் லாரிகளால் தொடர் விபத்து பிரச்சினைகள் உள்ளன. கல் குவாரிகளிலும் அரசியல் பின்புலம் இருப்பதால் இவற்றை முறைப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை இவர் எடுக்கப் போகிறார் என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.நேரு கூறும்போது, "பாலாற்றில் புதிய தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும். இன்சூரன்ஸ் திட்டத்தில் சிலருக்கு இழப்பீடு கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்வதுடன், புதிதாக இன்சூரன்ஸ் திட்டத்தை சரியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.