Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM

திம்மாபுரம் தோட்டக்கலைத்துறை பண்ணையில் மல்லிகைப் பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் இயந்திரம் அமைப்பு

திம்மாபுரம் தோட்டக்கலைத்துறை பண்ணையில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, வாசனை திரவியம் தயாரிக்கும் இயந்திரம்.

கிருஷ்ணகிரி

திம்மாபுரம் தோட்டக்கலைத்துறை பண்ணையில் ரூ.10 லட்சம் மதிப்பில் மல்லிகைப் பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்க இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைகொட்டாய்,மலை யாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி,மத்தூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளையும் மல்லிகை பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெங்களூரு சந்தைக்கு தினமும் 10 டன் பூக்கள், விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மல்லிகை சாகுபடியைப் பொறுத்தவரை கோடை காலங்களில் அதிகளவில் விளைச்சல் இருக்கும். அவ்வாறான நேரங்களில் பூக்கள் கிலோ ரூ.30 முதல் 50 வரை விற்பனையாகும். சில நேரங்களில் பூ பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. விலை ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கும் வகையில், வாசனை திரவியம்தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் மோகன்ராம் கூறியதாவது:

வேளாண்மைத்துறை அமைச்சர், சட்டப்பேரவையில் அறிவித்தபடி, முதற்கட்டமாக திம்மாபுரம் தோட்டக்கலைத்துறை பண்ணையில் மல்லிகைப் பூக்களில் இருந்து திரவியம் தயாரிக்க ரூ.10 லட்சம் மதிப்பில் இயந்திரம் வாங்கப்பட்டு, பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டம் முடிந்த பின்னர், உற்பத்தி தொடங்கப்படும். மேலும், மல்லிகை பூக்கள் குறைவான விலைக்கு விற்கும் போது, விவசாயிகளிடம் இருந்து அதிகளவில் கொள்முதல் செய்து திரவியம் தயாரித்து, சந்தைப் படுத்தப்படும். இன்னும் ஓரிரு வாரங்களில் திரவியம் தயாரிக்கும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x